அநீதிக்கு மேல் அநீதி.. அநீதியைத் தட்டிக் கேட்க ஜனவரி 4ல் ஆர்த்தெழுவோம்!

அநீதியைத் தட்டிக் கேட்க ஜனவரி 4ல் சென்னையில் / மதுரையில் ஆர்த்தெழுவோம்

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது முதல் அதை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் பாபர் மஸ்ஜிதை இடித்த பாவிகளை சட்டத் தின்படி தண்டிக்க வலியுறுத்தியும் நாம் உள்பட பல்வேறு இயக்கங்கள் டிசம்பர் ஆறாம் நாளில் போராட்டங்களை விடாமல் நடத்தி வந்தோம். நீதிமன்றம் விரைந்து தீர்ப்பளிக்கக் கோரி நாம் நடத்திய அனைத்து போராட்டங்களையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அர்த்தமற்றதாக்கி விட்டது.
சொத்துரிமைக்கும், மத உரிமைக்கும் விரோதமாக அமைந்த தீர்ப்பு உலக மக்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றமும் நியாயப் படுத்தப்பட்டு விட்டது. ஆரம்பம் முதலே அங்கே கோவில்தான் இருந்தது என்ற தவறான தீர்ப்பின் மூலம் பாபர் பள்ளிவாசலை யாரும் இடிக்கவில்லை என்ற தவறான நிலையை ஏற்படுத்தி விட்டது.
நீதிமன்றங்கள் மீது நாம் வைத்த அசைக்க முடியாத நம்பிக்கை கேள்விக்குறியாகி விட்டது. எனவே இனி நீதிமன்றங்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம்தான் எதிர் காலத்தில் முஸ்லிம்களின் உரிமையைக் காப்பாற்ற முடியும் என்ற நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டு விட்டனர். நீதிமன்றத் தீர்ப்புகள் விமர்சனத்திற்கு உட்பட்டவை என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. டிசம்பர் 6 அன்று போராட்டம் நடத்துவதை விட இன்ஷா அல்லாஹ் ஜனவரி 4ம் தேதியன்று சென்னையிலும் மதுரையிலும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் அந்தத் தீர்ப்பை ஆட்சேபணை செய்யும் வகையில் ஆர்ப்பரித்து எழ தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து முஸ்லிம்களையும் அழைக்கிறது.
நீதித்துறை சட்டத்தை மீறினால் நீதிமன்றங்களையும் கண்டிக்க தயங்க மாட்டோம் என்பதை உலகறியச் செய்வோம். ஜனவரி 4ல் நம் உணர்வை வெளிப்படுத்துவோம்.